
உலக முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நம்பமுடியாத சாதனையை செய்துள்ளார் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி, படைத்துள்ளார்.
அருணாச்சல பிரதேசம் அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக எட்டு சிக்ஸர்களை அடித்து, முதல் தர கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அதிலும் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளார். சூரத்தின் பித்வாலா மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிரொபி பிளேட் குரூப் போட்டியில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே அணி 576 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என வலுவான நிலையில் இருந்த நிலையில், 8ஆவது வீரராகக் மேகாலயா அணியின் வீரர் ஆகாஷ் குமார் சௌத்ரி களமிறங்கியுள்ளார்.
ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்ட அவர், அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி, தொடர்ச்சியாக எட்டு பந்துகளில் எட்டு சிக்ஸர்களை விளாசி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வெறும் ஒன்பது நிமிடங்கள் மற்றும் 11 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டியதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
அரைசதம் கடந்த பிறகு அவர் சந்தித்த மூன்று பந்துகளில் ஓட்டங்கள் எடுக்காத நிலையில், மேகாலயா அணி 628 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
இந்த மைல்கல்லின் மூலம், ரஞ்சி டிரொபி வரலாற்றில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரவி சாஸ்திரியுடன் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஆகாஷ் குமாரின் ஆதிக்கம் துடுப்பாட்டத்துடன் முடிவடையவில்லை; பந்துவீச்சிலும் புதிய பந்தை எடுத்து, அருணாச்சல பிரதேசத்தின் முதல் விக்கெட்டையும் கைப்பற்றி, அந்த நாளை தனக்கு மறக்க முடியாத நாளாக மாற்றிக்கொண்டார்.
இந்த சாதனையின் மூலம், 2012ஆம் ஆண்டு லெஸ்டர்ஷயர் அணிக்காக வெய்ன் வைட் 12 பந்துகளில் அரைசதம் அடித்த 13 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சி டிரொபியைப் பொறுத்தவரை, 2015ஆம் ஆண்டு திரிபுராவுக்கு எதிராக ஜம்மு & காஷ்மீர் வீரர் பன்தீப் சிங் 15 பந்துகளில் அடித்த அரைசதமே முந்தைய சாதனையாக இருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த சாதனை பாகிஸ்தானின் மிஸ்பா-உல்-ஹக் (21 பந்துகள்) வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.





