குப்பையில் உணவைத் தேடி சாப்பிடும் சிறுமி : நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!!

386

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரில், ஒரு சிறுமி குப்பையில் கிடந்த உணவைச் சாப்பிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சாலையோர குப்பை பொட்டலத்தில் இருந்து உணவை எடுத்து சாப்பிடும் அந்தச் சிறுமியின் வீடியோவை ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் பகிர்ந்ததுடன், அரசு நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டது.

நகராட்சி, சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் இணைந்து மூன்று துறை குழுக்கள் சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

விதிஷா பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் நடைபெற்றும், இதுவரை சிறுமியை அடையாளம் காண முடியவில்லை.

உள்ளூர் கடைக்காரர்கள், அந்தச் சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பு ராய்சென் மாவட்டத்திலிருந்து வந்த பேருந்தில் இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் சர்ச்சையாகவும் மாறியுள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர் ஜீது பட்வாரி, “விதிஷாவில் இருந்து வந்த இந்த மனதை பிழியும் வீடியோ, பாஜகவின் பத்தாண்டுகால தோல்வியடைந்த ஆட்சிக்குச் சான்றாகும்.

ஏழைகளுக்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களின் பயன்கள் மக்களை அடையாமல் போவதால் பசியால் வாடும் மக்கள் குப்பையில் உணவைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.