
பெங்களூரு ஹொசகெரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிய 31 வயதான ககன் ராவ், தனது மனைவி மேகனாவின் துன்புறுத்தலால் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்துக்கொண்டார்.
ககன் ராவ், சாமராஜநகரைச் சேர்ந்த இறுதி ஆண்டு BCA மாணவி மேகனாவை 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார்.
போலீஸ் தகவலின்படி, திருமணத்திற்கு பின் மேகனா அடிக்கடி கணவர் மீது முறைகேடான உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, இடையறாது சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மனவேதனைக்குள்ளான ககன் ராவ் அறைக்குச் சென்று சேலையைக் கட்டி சீலிங் ஃபேனில் தூக்கிட்டுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து ககன் ராவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், மனைவி மேகனாவுக்கு எதிராக தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கு முன்பும் மேகனா பெண்கள் காவல் நிலையத்தில் கணவருக்கு எதிராக புகார் அளித்திருந்ததாகவும், சமீபத்தில் சமாதானம் ஆன பிறகும் சண்டைகள் தொடர்ந்ததாகவும் போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.





