இலங்கையர்கள் பலர் கண்பார்வை இழக்கும் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

530

இலங்கையில் ஐந்தில் ஒரு வயது வந்தவர் நீரிழிவு நோயுடன் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கண் தொடர்பான சிக்கல்கள் உருவாகும் அபாயத்தில் இருப்பதாகவும் இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வயது வந்தோரிடையே நீரிழிவு நோயின் பரவல் 23% முதல் 30% வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, சுமார் ஐந்தில் ஒருவரை இது பாதிக்கிறது. சமீபத்திய தரவுகளின்படி, பொது நீரிழிவு நோய் பாதிப்பு 73% அதிகரித்துள்ளது. உலகளவில், ஒன்பது பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கண் நோய்களை உருவாக்குகிறது. மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் 11% பேருக்கு கண்பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.

நீரிழிவு நோய் குறிப்பாக உழைக்கும் வயதுடைய மக்களிடையே பார்வையை கணிசமாகப் பாதிக்கிறது. இதனால், ஆண்டுதோறும் சுமார் ரூ. 923 மில்லியன் வருமான இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கண் வைத்தியசாலையின் நீரிழிவு கண் சிகிச்சைப்பிரிவுக்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் முதியவர்கள் அல்ல; மாறாக, அவர்கள் 40 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று மருத்துவர் பந்துதிலக மேலும் தெரிவித்தார்.

“இந்த நபர்கள் பார்வையிழக்க எந்த காரணமும் இல்லை. ஆரம்பத்திலேயே கண்டறிதல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான சிகிச்சையின் மூலம்,

இந்த நிலையை நிர்வகிக்கலாம் அல்லது தடுக்கலாம். தடுப்பு தோல்வியடைந்தாலும், ஆரம்ப கட்ட சிகிச்சைகள் கிடைக்கின்றன,” என்றும் அவர் கூறினார்.