சவுதி அரேபியாவில் கோர விபத்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற 42 இந்தியர்கள் பலி!!

242

சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் தாங்கியுடன் மோதியதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்ட நிலையில், ஜோரா என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்து மீது டீசல் லொரி மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 சிறுவர்கள் உள்பட 42 பேர் பலியாகியுள்ளார்கள். பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தன.

இதை தொடர்ந்து மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்றனர். பலியான அனைவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

இந்தசம்பவம் குறித்து அறிந்த தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, உயிரிழந்தவர்கள் குறித்து முழு விவரங்களை கண்டறியவேண்டும் என்றும் களத்தில் இறங்கி உரிய நிவாரண முயற்சிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, பேருந்து விபத்தை அடுத்து ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு 8002440003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.