சம்பளம் குறைந்ததால் கணவரை விவாகரத்து செய்த மனைவி : இளைஞரின் பதிவால் சர்ச்சை!!

159

சீனாவில் வசிக்கும் சியான்சியான் என்ற இளைஞர் தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, திருமண உறவுகளில் பொருளாதார நிலை மற்றும் பரஸ்பரப் புரிதல் குறித்து பெரிய விவாதம் எழுந்துள்ளது.

சியான்சியான் தனது பதிவில், “சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை செய்து, மாதம் ரூ. 6.23 லட்சம் வருமானம் பெற்றேன். அப்போது மனைவியுடன் நலமான வாழ்க்கை இருந்தது.

குடும்பத்தின் செலவுகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொண்டேன்; மனைவிக்காக செலவிடுவதிலும் எந்த தயக்கமும் இல்லை” என்று கூறியுள்ளார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக திடீரென அந்த உயர்ந்த சம்பள வேலையை இழந்து விட நேர்ந்தது. வருமானம் குறைந்ததால், வாழ்வாதாரத்திற்காக உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த மாற்றத்திற்குப் பிறகு குடும்பத்திலும் அதிருப்தி ஏற்பட்டதாக அவர் தனது பதிவில் எடுத்து கூறியுள்ளார்.

“நான் வேலை இழந்து, வருமானம் குறைந்ததும், மனைவி என்னிடம் நடந்து கொண்ட விதம் மாறியது.

எனது வாழ்வாதார போராட்டத்தை புரிந்து கொள்ளாமல், வசதிகள் குறைந்து விட்டதற்காகவே அவர் என்னை விலக்கிப் பார்க்கத் தொடங்கினார்.

சில வாரங்களுக்குள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுவும் அளித்துவிட்டார்” என்று சியான்சியான் குறிப்பிட்டுள்ளார்.

சம்பள உயர்வு, சமூக அந்தஸ்து போன்ற பொருளாதார காரணங்களின் அடிப்படையில் தனது திருமணம் தகர்ந்துவிட்டதாக அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். “அவர் உண்மையாக என்னைக் காதலித்திருந்தால்,

இந்த சிக்கலான நேரத்தில் என்னை விட்டுப் பிரிந்திருக்க மாட்டார். வருமானத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பதை அவர் எடுத்த முடிவு நிரூபித்து விட்டது” என்று பதிவில் எழுதியுள்ளார்.

சியான்சியானின் இந்த பதிவு சீன சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலர் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, சிலர் குடும்பத்தில் பொருளாதார நிலைத்தன்மை அவசியம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்தில் பணம் முக்கியமா, பரஸ்பர அன்பும் புரிதலும் முக்கியமா என்பது குறித்து இணையத்தில் பெரிய விவாதம் உருவாகியுள்ளது.