
கிளாப் போட் மூவிஸ் சார்பில் வினாயக் பெரும் பொருட்செலவில் தயாரித்து, நடிக்கும் படம் மகாபலிபுரம். இப்படத்தில் அங்கனா ராய், கருணா, ரமேஷ், வெற்றி கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தை டாண் சேண்டி இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் வெளியிடவுள்ளது. முகமூடி, யுத்தம் செய் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள கே இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கேயார், இயக்குனர்கள் பிரபு சாலமன், ஆர்.வி.உதயகுமார், துரை, நடிகர்கள் விஜய் சேதுபதி, சிபிராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பாடல்களை கேயார் முன்னிலையில் பிரபு சாலமன் வெளியிட விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.
பின்னர் கேயார் பேசும்போது, படத்தை எடுப்பது கஷ்டம் என்ற காலம் போய் இப்போது, அதை ரிலீஸ் செய்வதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஸ்டுடியோ 9 போன்ற நிறுவனங்கள்தான் நல்ல படங்களை தேர்வு செய்து வெளியிட்டு அந்த படங்களுக்கு ஒரு அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கிறது.
அதேபோல் படங்களை வெளியிடுவதிலும் ஒரு திட்டமிடல் வேண்டும். ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் சிறு பட்ஜெட் படங்களை வெளியிட்டால் அது தற்கொலைக்கு சமமானது. அது சரியான முடிவும் கிடையாது. அவர்களுடைய படங்கள் வந்தால் மக்கள் அதைத்தான் அதிகமாக பார்க்க விரும்புவார்கள். அதனால், சிறு பட்ஜெட் படங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் வசூலை அள்ளமுடியாது.
இந்த வருடம் வெளியான படங்களிலேயே வீரம், வேலையில்லா பட்டதாரி ஆகிய 2 படங்கள்தான் வணிக ரீதியில் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். சமீபத்தில் வெளியான சதுரங்க வேட்டை படம் நல்ல படத்துக்கான அங்கீகாரம் இருந்தாலும் பெரிய அளவில் வசூலை பெறவில்லை என்பது வருத்தம்தான் என்று அவர் பேசினார்.





