இரு மகள்களைக் கொன்று தந்தை எடுத்த விபரீத முடிவு!!

13

மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டுக்குச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, எலக்ட்ரீசியன் ஒருவர் தனது இரண்டு மகள்களையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆலங்குளம், முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்தவர் கோபிராஜ் (வயது 40). எலக்ட்ரீசியனான இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், யுவஸ்ரீ (10), கனிஷ்கா (5) என இரண்டு மகள்களும் இருந்தனர். இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

சமீபத்தில் கணவன் – மனைவிக்கு இடையே சிறிய சண்டை ஏற்பட்ட நிலையில், மனவருத்தம் அடைந்த மனைவி காயத்ரி இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த கோபிராஜ், தனது மகள்களுடன் தனியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் ஆகியும் கோபிராஜின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் யுவஸ்ரீ மற்றும் கனிஷ்கா இருவரும் சடலமாக கிடந்தனர். அதே அறையில் கோபிராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மன உளைச்சலில் இருந்த கோபிராஜ், தனது இரண்டு மகள்களையும் ஒயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்பத் தகராறின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.