
சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்தில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 13 வயதில் 8ம் வகுப்பு படித்து வரும் ஹரிஹரன் எனும் மகன் இருந்தார்.
சமீபத்தில் மீனாவின் உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சதீஷ் வீட்டில் தங்கியிருந்தார். அந்த குழந்தைக்காக வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில்,
சேலையைக் கொண்டு தொட்டில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. நந்தினி சொந்த ஊருக்குச் சென்ற பிறகும், அந்தத் தொட்டிலைக் கழட்டாமல் இருந்தனர். ஹரிஹரன் அந்தத் தொட்டிலில் விளையாடுவது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை, ஹரிஹரனை பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்து, வீட்டில் விட்டுவிட்டு தந்தை சதீஷ் சவாரிக்குச் சென்று விட்டார். தாய் மீனா மற்றும் சகோதரி பவ்யஸ்ரீ ஆகியோர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்ததால், ஹரிஹரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.
வழக்கம் போல், ஹரிஹரன் மாடியில் உள்ள சேலையால் கட்டிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டின் போது, எதிர்பாராத விதமாகத் தொட்டில் முறுக்கிக் கொண்டு ஹரிஹரனின் கழுத்தை இறுக்கியது.
இதில் ஹரிஹரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கித் தொங்கியுள்ளார். வீட்டிற்குத் திரும்பி வந்த தாய் மீனா, மகன் தொட்டிலில் கழுத்தை இறுக்கிய நிலையில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக ஹரிஹரனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டிலில் விளையாடிய போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





