திருமண வீட்டில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் : மணமக்கள் எடுத்த முடிவு!!

8

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் ஒரு திருமண வீட்டில் எதிர்பாராத ஒரு விபத்து நிகழ்ந்ததில் மணமகனுக்கும் மணமகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மணமக்கள் திருமணம் தொடர்பான சடங்குகளில் பங்கேற்றிருந்த நிலையில், கையில் பல வண்ணங்களுடைய பலூன்களுடன் மணமகன் நடந்துவர, அவர் அருகே மணமகள் வந்துகொண்டிருந்திருக்கிறார்.

மணமகன் குஷாக்ரா, தன் கையில் ஒரு கொத்து பலூன்களை வைத்திருந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக, திடீரென அந்த பலூன்கள் வெடித்துள்ளன.

பலூன்கள் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகளான டான்யாவின் முகம் மற்றும் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டதுடன், அவரது ஒருபக்க தலைமுடியும் கருகியுள்ளது.

விடயம் என்னவென்றால், அவர்கள் வைத்திருந்தது ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள். ஹைட்ரஜன் எளிதில் தீப்பிடிக்கும் வாயு ஆகும். யாரோ ஒருவர் மணமக்களுக்குப் பின்னால் பட்டாசுகள் கொளுத்திக்கொண்டிருக்க, தீப்பொறி பட்டு பலூன்கள் வெடித்துள்ளன.

தங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நாளில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தாலும், அது தங்கள் திருமணத்துக்கு இடையூறாக வரக்கூடாது என முடிவெடுத்த தம்பதியர் திருமணம் செய்துகொண்டு பிறகுதான் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் இடுகை ஒன்றை வெளியிட்டுள்ள மணமகள் டான்யா, தீப்பற்றிய முடியை வெட்டி, காயங்களை மறைக்க அடுக்கடுக்காக மேக் அப் போட்டுக்கொண்டுதான் திருமணம் செய்துகொண்டோம் என்கிறார்.

இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்பதற்காகவே அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வதாகவும் டான்யா தெரிவித்துள்ளார்.