
காதலன் மரணமடைந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில், அதனை உண்மை செய்தி என்று நம்பி கதறியழுது கொண்டிருந்த பள்ளி மாணவி, மன அழுத்தத்தில் கிராம தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தீபான்ஷு மற்றும் 15 வயது ஜோயா கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
குடும்பங்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் உறவைத் தொடர்ந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தீபான்ஷு தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
இந்தச் செய்தி ஜோயாவுக்கு சென்ற போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டது.
காதலன் மரணமடைந்தார் என்ற நம்பிக்கையில் அதிர்ச்சி அடைந்த ஜோயா, தாங்க முடியாத துயரத்தில் பெண் கிராமத் தலைவர் அலுவலகத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
ஆனால் உண்மையில் தீபான்ஷு உயிருடன் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது பின்னர் தெரியவந்தது. தவறான தகவல் காரணமாக சிறுமி உயிரிழந்த இந்த நிகழ்வு, மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சமூகத்தினர் மத்தியில் பதற்றம் அதிகரித்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வைக்க கூடுதல் பாதுகாப்பு படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.





