
நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (26) முதல் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடர்கின்றது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், இதுவரை 170 மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், 26 பேர் வரை அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தற்போதைய அறிக்கையின்படி, நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிப்படைந்த மாவட்டங்கள் : 17
பாதிப்படைந்த பிரதேச செயலகப் பிரிவுகள் : 79
பாதிப்படைந்த குடும்பங்கள் : 1,158
பாதிப்படைந்த நபர்கள் : 4,008
குறிப்பாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக,
உயிரிழப்புகள் : 18 (அனைத்தும் பதுளையில்)
காயமடைந்தோர் : 10
காணாமல் போனோர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
சீரற்ற வானிலை காரணமாக வீடுகளும் பெருமளவு சேதமடைந்துள்ளன:
முழுமையாக சேதமடைந்த வீடுகள் : 3
பகுதியளவில் சேதமடைந்த வீடுகள் : 381
பெரும்பாலான குடும்பங்கள் தற்காலிக பாதுகாப்பு முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்:
பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளோர் : 131
உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளோர் : 472
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வானிலை மேலும் மோசமடையும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முப்படையினர் மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





