
பிரித்தானியாவில் 17 வயதுடைய சிறுவனை கத்தியால் குத்திய 19 வயது இளைஞனுக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் நோத்-கால்ட் (Northolt) நகரில் வசித்து வந்த சுலக்ஷன் திருச்செல்வம் என்னும் (19) தமிழ் இளைஞன், தனது பள்ளியில் பயின்ற துஷான் சீனு என்ற (17 வயது) சிறுவனை கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுலக்ஷன் திருச்செல்வம் தனது பள்ளியில் கல்வி கற்ற துஷான் சீனுவை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். அத்தோடு பகிடிவதையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், துஷான் சீனுவின் குடும்பத்தினர் பயத்தில் வேறு இடம் மாற்றியுள்ளதுடன், துஷான் சீனுவை வேறு பள்ளிக்கூடத்திற்கும் மாற்றியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில், கடந்த மே மாதம் 11ம் திகதி துஷான் சீனு, சுலக்ஷன் திருச்செல்வத்தை கிங்ஸ்டன் பிரதேசத்தில் வைத்து வீதியில் தற்செயலாக சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துஷான் சீனு, சுலக்ஷனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த நிலையில், ஒரு நாள் துஷான் சீனு இருக்கும் புது வீட்டிற்குச் சென்று சுலக்ஷன் கதவைத் தட்டியுள்ளார். வெளியே வராவிட்டால் கண்ணாடியை உடைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன துஷான் வெளியே வந்தவேளை அவரை, முகத்தில் அடிப்பது போன்று மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு சுலக்ஷன் தப்பி ஓடியுள்ளான்.
கத்தியால் குத்தியதை உணராத துஷான் 30 மீற்றர் வரை சுலக்ஷனை துரத்திச் சென்றுள்ளார். தனது உடல் நீரில் நனைவதைப் போல உணர்ந்த துஷான், இரத்தம் வழிவதையும், தான் கத்தியால் குத்தப்பட்டதையும் உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து துஷான் சீனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை மூலம் மார்பிற்கும் கைக்குமிடையில் குத்தப்பட்டிருந்த கத்தி அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் செய்த தவறை உணர்ந்த சுலக்ஷன் திருச்செல்வம் பொலிஸில் சரணடைந்து, தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக நேற்று முன்தினம் ( 02.09) நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சுலக்ஷன் திருச்செல்வத்திற்கு 4 வருடங்கள் சிறைத்தண்டனையை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுபவிக்க வேண்டுமென லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இங்கு பேசிய நீதிபதி, உங்களை 19 வயதில் நான் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக கவலையடைகிறேன். நீங்கள் குத்திய கத்தி சற்று ஆழமாக ஏறி இருந்தால் கூட துஷான் கொலை செய்யபப்ட்டு இருப்பார் என தெரிவித்துள்ளார்.
சுலக்ஷன் திருச்செல்வத்தின் மீது ஏற்கனவே வெடிகுண்டு புரளி ஒன்றை கிளப்பிய குற்றச்சாட்டும் உள்ளதாக நீதிமன்றில் அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.





