
வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ் (எச்ஐவி) நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
எயிட்ஸ் நோய் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ஆம் திகதி. உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இலங்கையில் இதுவரை 7168 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், ஆண்கள் 5544 பேரும் பெண்கள் 1603 பேரும் இடைநிலை பால் நிலையை சேர்ந்த 21 பேரும் இதனுள் அடங்குவர்.
இதுவரை நாட்டில் 1629 பேர் இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளுமின்றி நோய் தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 43 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். அவர்களில் 21 பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் ஆவர்.
2 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
13 பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர். ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டு வருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கி வருகின்றோம்.
அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்த முடியும். எயிட்ஸ் நோய் பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளல்,
நோய் தொற்றுள்ள ஒருவரின் குருதியை இன்னுமொருவருக்கு செலுத்துதல், தொற்றுள்ள தாய் ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய் பரவுகிறது.
இலங்கையில் தற்போது குருதி மாற்றங்களின் போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்ப்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டில் 15 வயது தொடக்கம் 25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது.
குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டு பிடிக்க முடியும். எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால் குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம்.
வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாக வந்து பரிசோதனைகளை மேற் கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





