பசறை மண்சரிவில் உயிர் பிழைத்த ஆசிரியரின் திகில் அனுபவம்!!

365

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்வடைந்துள்ளது. மழை வெள்ளம், புயல் மற்றும் மன்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தங்களினால் இதுவரையில் 607 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த அனர்த்தங்கள் காரணமாக இன்னமும் 214 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பசறை யூரி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு உயிர் பிழைந்த ஆசிரியர் ஒருவர் தனது திகில் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார், அவரது பதிவிலிருந்து,

27ம் திகதி நாங்கள் ஆறு பேரும் வீட்டுக்குள்ளேயே இருந்தோம். மாலை 4.30 மணி இருக்கும். அந்நேரம் கொஞ்சம் கடுமையான மழைதான்.

நான், (இந்து) மனைவி மற்றும் பிள்ளைகள் மூவரும் பாயில் படுத்தவாறு tv பார்த்துக் கொண்டும் மறுபக்கம் சின்னவளின் பரதநாட்டியத்தை குழப்பிக் கொண்டும் இருந்தோம். அப்போது முன்வாசல் கதவின் வழி மழைத்துளி வருவதை தடுக்க மழையில் நனைய சங்கடபட்டவாறு வெளியே சென்றேன்.

ஒரு கையில் குடையுடன் தகரத் துண்டினை எடுத்து முன் கதவில் சாய்ந்து வைத்தேன்.. அப்போது நீர் குழாயை திறந்தால் மண் கலந்த நீர்.. எனவே குடிப்பதற்கு தேவையான மழை நீரை சேகரிப்போம் என்று பாத்திரங்களை எடுக்க கூறியதால் மனைவி தரையில் இருந்து எழுந்தார். Raincoat ஐ எடுக்குமாறு மகனிடம் கத்தினேன்.

அதனால் அவனும் தரையில் இருந்து எழுந்தான்.. மழை மேலும் அதிகரிக்குமோ என்று கதவை பிடித்தவாறு எட்டி மேல் நோக்கி பார்த்த போது வீட்டின் பின்புறம், கொஞ்சம் தூரத்தில் சேற்று நீர் உயரமாக தெரிப்பது தெரிய.. “எல்லா ஒடுங்க”என்று கத்தியவாறு வீட்டுக்குள் ஓடி பிள்ளைகளை எழுப்பி ஓடும் போது எல்லாம் முடிந்து விட்டது.

நானும் மனைவியும் சின்னவளும் (பவன்யா) அம்மாவும் இடிபாடுகளுக்குள். மகனும் (மோகுலேஸ்), மகள் (தனன்யா) வெளியே. அவர்களை சேற்று நீரும் கற்களும், மரங்களும் சூழ தவித்து நிற்கிறார்கள்.. உள்ளே மனைவியின் கால்கள் இடிபாடுகளுக்குள்.. எதுவும் செய்ய முடியவில்லை..

சின்னவள் (பவன்யா) தரையில் தரையில். அவளது தலை மட்டும் தெரிகிறது. செல்லத்தை இழுக்க முடியவில்லை..

அம்மாவுக்கும் அப்போது எதுவும் காயங்கள் இல்லை.. ஆனால் அவருக்கு ஒருவரின் துணை இல்லாது அங்கிருந்து வெளியேற முடியாது.. எனக்கு அடிபட்ட போது இடிபாடுகளுக்குள் சிக்கவில்லை.

ஒருகணம்.. யாரை காப்பது? அம்மாவா? மனைவியா? சின்னவளையா? வெளியே நிற்கும் பிள்ளைகளையா?

பேர் செல்ல இருவரையவது காப்போம் என சின்னவளை கடவுளை வேண்டிக்கொள் என்றும் மனைவியை அம்மாவை பார்த்தவாறு உதவிக்கு கத்தியவாறு இடிபாடுகளுக்குள் இருந்து வெளியே வந்தேன்..

கடவுள் கொடுத்த, கல்வி கொடுத்த தைரியம்.. பிள்ளைகள் இருவரை பாதுகாப்பற்ற சேற்றிலும் கற்கள், மரங்கள், குப்பைகள் நிறைந்த வழிகளில் இரங்கி, விழுந்து வழிதெரியாமல்,

வழி உருவாக்கி அதன் வழி மகன் ஒட மகளை கையில் பிடித்து இழுத்தவாறு முன் இருந்த லயன் வீடோன்றின், முன் கதவு வழியே சென்று பின் கதவை திறந்து பிள்ளைகளையும் அந்த வீட்டில் அதுவரை முழங்கால் அளவை தாண்டி நிரம்பிக்கொண்டிருந்த சேற்று வெள்ளத்தையும் வெளியேற்றினேன்.

இருவரும் திரும்பி பார்க்காது கண்ணில் பட்ட ஆட்களை ஓடுங்கள்.. நான் அம்மா, தங்கச்சி, அம்மி (அம்மா) அழைத்து வருகிறேன்..

என்று மரணத்தை எதிர்த்து வந்த வழியே வலியுடன் மீண்டும் விழுந்து, எழுந்து, ஓடி வீட்டிற்கு சென்றேன்.. எதையும் தூக்க, அசைக்க முடியவில்லை..

அசைக்க பயம் தங்கமகள் தரையில்.. அவள் தைரியமானள்.. அவள் அப்போதும் அழவில்லை.. அந்த கணத்தில் உதவிக்கு அருகில் யாருமில்லை.. கையறு நிலை என்பதைப் அனுபவித்து அறிந்தேன்..

மகன், மகள் ஊடாக தகவல் அறிந்தோர் “சேர் செத்தா ஒன்னா சாவோம்.. என்ற வார்த்தைகளோடு அயலவரும் ஊரவரும் துணைக்கு வர செய்த புண்ணியம் அறுவரும் இன்று உயிருடன் இருக்கிறோம்…

(எல்லாம் 30 – 40 நிமிடங்களுக்குள் மரண வாசனையை அனுபவித்த போது) என அவர் தனது திகில் அனுபவத்தை வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.