அரச ஊழியர்களின் சம்பளமில்லா விடுப்பு : அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு!!

605

2026ஆம் ஆண் டுஜனவரி 1 ஆம் திகதி முதல், அரச ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை செய்ய சம்பளமில்லா விடுப்பு வழங்கப்படாது என்று ஒரு புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், உள்ளூர் அல்லது வெளிநாடுகளில் மாற்று வேலை தேடுவதற்காக பலர் பயன்படுத்தி வந்த ஐந்து ஆண்டு விடுப்பு விருப்பத்தை ரத்து செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சக செயலாளர் எஸ். ஆலோக பண்டாரவை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த சிறப்பு விடுப்பை முடிவுக்குக் கொண்டுவரும் சுற்றறிக்கை இந்த வாரம் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே அத்தகைய விடுப்பைப் பெற்றவர்களுக்கு விடுப்பு நீடிப்பு இருக்காது என்றும், புதிய விண்ணப்பங்களும் இனி பரிசீலிக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2022 ஆம் ஆண்டில் ஐந்து ஆண்டு சம்பளமில்லா விடுப்பு வழங்க அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டது. ஓய்வூதியம் பெறும் அதிகாரிகளுக்கு அவர்களின் மூப்புக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விடுப்பு வழங்கப்பட்டது.

இந்த வசதியைப் பயன்படுத்தி சென்ற மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற நிபுணர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக, இப்போது அரசுத் துறையில் குறித்த நிபுணர்களுக்கான பாரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டபோது, அரசாங்கத்தின் சம்பள செலவைக் குறைக்க வேண்டிய அவசியம் இருந்தது, ஆனால் இப்போது பொருளாதாரம் நிலையாகிவிட்டதால், அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவது முக்கியம் என்று ஆலோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.