டிசம்பர் – ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் : வடக்கு மாகாணத்தில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை!!

486

வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழமுக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று (12.12.2025) தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி செயற்பட்ட விதம் குறித்த தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, வட மாகாணத்தில் சாதாரண மழைவீழ்ச்சியை விட அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும், வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை அண்மித்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை விடக் குறைவான மழைவீழ்ச்சியே நிலவும் என அந்தத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல்கள் உருவாகும் பட்சத்தில், இந்த வானிலை முன்னறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.