யாழிலிருந்து இன்று ஓட்டப் பயணத்தை தொடங்கிய ஹொங்காங் கிரிக்கெட் வீரர்!!

359

புற்றுநோயில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக இலங்கையின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, முன்னாள் ஹொங்காங் கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா ஓட்ட பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நிதி திரட்டும் முயற்சியில், இவர் இலங்கை முழுவதும் ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

குறித்த பயணமானது, இன்று (24.12.2025), யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனையிலிருந்து ஆரம்பித்து, டிசம்பர் 30ஆம் திகதி அன்று மாத்தறையில் உள்ள தேவுந்தரா முனையில் முடிவடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஓட்ட பயணமானது, 574 கிலோமீட்டர் (356.7 மைல்) வரையானது என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அவரது உடல் மற்றும் மனம் கடுமையான சோர்வினை எதிர் கொள்ளும் எனவே, ஒரு நாளைக்கு சுமார் 100 கிலோமீட்டர் ஓட அவர் திட்டமிட்டுள்ளார்.

ராகுல் சர்மா, இதற்கு முன்பு முயற்சி செய்திடாத ஒரு சவாலை ஏற்க ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உடற்பயிற்சி உடலியல் நிபுணராக பணிபுரியும் அவர், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஹொங்காங்கின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடினார்.

இந்நிலையில், குழந்தை பருவ புற்றுநோயைக் குணப்படுத்த ஆராய்ச்சி நடத்தும் சிட்னியை தளமாகக் கொண்ட குழந்தைகள் புற்றுநோய் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கே அவர் இந்த ஓட்ட பயணத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.

அதன்படி, இந்த நல்ல நோக்கத்திற்காக குறைந்தது 20,000 அவுஸ்திரேலிய டொலர்களை (தோராயமாக 13,100 அமெரிக்க டொலர்கள்) திரட்டுவதே அவரது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.