
வவுனியா – வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலின் போது வவுனியா, தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யோ.அபிசாந் என்ற இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்திருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த செட்டிகுளம் பொலிசார் மூவரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
தொலைபேசி கலந்துரையாடலில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதையடுத்து இந்த கொலை நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.





