ட்ரம்பின் மீது நம்பிக்கை இல்லை : டன் கணக்கில் தங்கத்தை மீட்க இத்தாலியும் ஜேர்மனியும் தீவிரம்!!

41

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்வில் பத்திரப்படுத்தப்பட்டுள்ள டன் கணக்கிலான தங்க இருப்புக்களை ஜேர்மனியும் இத்தாலியும் திரும்பப் பெற உள்ளது.

ஜேர்மனியும் இத்தாலியும்

கடுமையான இறக்குமதி வரிகள் உட்பட உலகப் பொருளாதாரத்தையே உலுக்கும் பல முடிவுகளை ட்ரம்ப் எடுத்துள்ள நிலையிலேயே ஜேர்மனியும் இத்தாலியும் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

உலகில் மிக அதிகமாக தங்கம் இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜேர்மனியும் இத்தாலியும் முதலிடங்களில் உள்ளன. இத்தாலிக்கு சுமார் 2,500 டன் தங்கமும் ஜேர்மனிக்கு 3,500 டன் தங்கமும் கையிருப்பு உள்ளது.

இந்த நிலையில், ஜேர்மனி 1,200 டன் தங்கத்தை அமெரிக்காவின் மத்திய வங்கியில் முதலீடு செய்துள்ளது. இத்தாலி 1000 டன் வரையிலான தங்கத்தையும் பத்திரப்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போது இரு நாடுகளும் இந்த தங்கம் மொத்தமும் திரும்பப்பெறும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாடுகள் மீதான அவநம்பிக்கை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ட்ரம்ப் எப்போது, ​​என்ன முடிவு எடுப்பார் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையும், பெடரல் ரிசர்வ் நடவடிக்கைகளில் தலையிட அவர் எடுக்கும் முயற்சிகளும்,

ஈரான் மீது தாக்குதல் நடத்த அவர் எடுத்த முடிவும், தங்கம் விவகாரத்தில் இத்தாலியும் ஜேர்மனியும் கருத்தில் கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

முடக்க ட்ரம்ப் முடிவு

புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அமெரிக்க பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் அமெரிக்க தங்க இருப்புக்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சொத்துக்கள் அனைத்தையும் முடக்க ட்ரம்ப் முடிவு செய்யலாம் என்ற அச்சம் காரணமாகவே இத்தாலி மற்றும் ஜேர்மனி தங்கள் தங்க இருப்புக்களை திரும்பப் பெறும் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொதுவாக அமெரிக்கா அரசியல் ரீதியாக நிலையானதாகவும், உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியாகவும் இருப்பதைக் கருத்தில் கொண்டு மட்டுமே உலக நாடுகள் பல தங்களின் தங்க கையிருப்பை அமெரிக்க மத்திய வங்கியில் பாதுகாக்கின்றன.

ஆனால், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் நாணய ஏற்ற இறக்கம் காரணமாக, இந்தியா உட்பட பல நாடுகள் வெளிநாடுகளில் உள்ள தங்க இருப்புக்களை மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.