
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதிகோரி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(29.12.2025) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது, முல்லைத்தீவு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று, ஜனாதிபதி செயலகத்திற்கும் அதன் பிரதிகள் சுகாதார அமைச்சர், செயலாளர் நாயகம், சுகாதார பணிமனை,

வடமாகாண ஆளுனர் அலுவலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போராட்டத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த சிறுமி டினோஜாவுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டமானது இன்றையதினம்(29) நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா (வயது 12) என்ற சிறுமி திடீர் சுகவீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி சிகிச்சையின்போது உயிரிழந்தார். மருத்துவத் தவறு காரணமாகவே, இந்த இறப்புச் சம்பவித்தது என்று சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே, சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி, முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு வணிக நிறுவனங்கள், சங்கங்கள் எனப் பல தரப்புகளும் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. அத்துடன், ஏனையோரின் ஆதரவையும் அந்தத் தரப்பினர் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையின் செயற்பாட்டினை உறுதி செய்ய மருத்துவமனையில் பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள்,சுகாதார பணியாளர்களுக்கும்,மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





