
தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கெளரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை நந்தினி தற்கொலை செய்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கெளரி சீரியலில் ‘கனகா’, ‘துர்கா’ ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை நந்தினி. இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
நடிகை நந்தினி ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். தெலுங்கு அவருடைய தாய்மொழி. இவருக்கு தமிழில் ‘கௌரி’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையே, பெங்களூருவில் வசித்து வந்த நந்தினி, தனது வீட்டில் நேற்று(29) தற்கொலை செய்துகொண்டார். ‘கௌரி’ சீரியலின் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக நந்தினியும் பெங்களூருவில் வசித்து வந்தார்.
அண்மையில் தான் இந்த தொடரின் படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது. அவரும் சென்னைக்கு வந்து நடித்து கொடுத்துள்ளார். இதற்கிடையில் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட நந்தினி பெங்களூருவுக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் திருமணம் செய்துகொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தி வந்ததாகவும், தான் திருமணத்திற்கு தயாராக இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் எழுதப்பட்டிருந்தது.
மேலும், மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த முடிவை எடுப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





