கிங் ஓயாவில் காணாமல்போன மாணவி சடலமாக மீட்பு : காதலன் வைத்தியசாலையில்!!

133

கிங் ஓயாவில் குதித்து காணாமல்போன பாடசாலை மாணவி நேற்று (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஜா – எல, போபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.

குறித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) தனது 18 வயதுடைய காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வென்னப்புவை பிரதேசத்திற்கு வரழைத்து காதலன் கண் முன்பு கிங் ஓயாவில் குதித்துள்ளார்.

மாணவியை காப்பாற்ற முயன்று காதலனும் கிங் ஓயாவில் குதித்துள்ள நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் மாணவி நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார். காணாம்போன மாணவி நேற்று திங்கட்கிழமை (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவியின் குடும்பத்தில் பல தனிப்பட்ட பிரச்சினைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.