காதலியை காப்பாற்ற போராடிய காதலன் பொலிஸாரினால் கைது!!

171

புத்தளத்தில் ஜின் ஓயாவில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட யுவதியின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி தண்ணீரில் குதித்த யுவதியை காப்பாற்றும் நோக்கில் குதித்த காதலன் மக்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், யுவதி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காதலன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அந்த இளைஞர் வென்னப்புவ பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர் வென்னப்புவ, நைனமடம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ருமேஷ் லக்ஷன் என தெரியவந்துளளது.

சம்பவத்தில் உயிரிழந்த 17 வயதான உமயங்கனா சத்சரணி என்ற யுவதி, கொச்சிக்கடையில் உள்ள பொருத்தொட்ட பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட காதலன் வழங்கிய வாக்குமூலத்தில், “உயிரிழந்த உமயங்கனாவுக்கும் எனக்கும் பல வருடங்களாக காதல் இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இது தெரியும். 28 ஆம் திகதி மாலை, உமயங்கனா எங்கள் வீட்டிற்கு வந்தார்.

அந்த நேரத்தில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அவர் தனது வீட்டிற்குச் சென்று எனக்கு தொலைபேசியில் அழைத்து, அவருடைய அம்மா தன்னைத் திட்டுவதாகக் கூறினார்.

அதனால் வீட்டிற்குச் செல்ல அச்சமடைந்த நிலையில் காணப்பட்டார். நான் நைனமடமவில் உள்ள ஜின் ஓயாவில் பாலத்திற்குச் சென்றபோது, அவர் பாலத்திலிருந்து குதிப்பதைக் கண்டேன். அவரை காப்பாற்ற நானும் ஜின் ஓயாவில் குதித்தேன். ஆனால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.