
மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவெல பாற்பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று சனிக்கிழமை (10.01.2026) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா – பட்டிபொல பிரதான வீதியில் ரூவான் எலிய பகுதியில் குறித்த லொறி எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பிரதான வீதியில் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லொறி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த பகுதிக்கான போக்குவரத்து தற்போது ஒருவழி பாதையாக இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர.
லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் இருந்த சோள செடிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு பாரவூர்திக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





