ஏமாறாதீர்கள் : 2,000 ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!!

195

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பணத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிக்கும்போது, வாள் ஏந்திய சிங்கத்தின் உருவம் மற்றும் “2000” என்ற இலக்கம் தெளிவாகத் தெரியும்.

பணத்தாளின் முன்பக்கமும் பின்பக்கமும் அச்சடிக்கப்பட்டுள்ள சிங்கத்தின் உருவம் வெளிச்சத்தில் பார்க்கும்போது ஒன்றிணைந்து முழுமையான படமாகக் காட்சியளிக்கும்.

பணத்தாளைச் சற்றே சரிக்கும்போது, அதன் பாதுகாப்பு நூல் நீல நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறும். இதில் கொழும்பு கலங்கரை விளக்க மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் “2000” என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன.

பணத்தாளில் உள்ள “2000” என்ற இலக்கம் மற்றும் “இலங்கை மத்திய வங்கி” என்ற வாசகம் சற்றுத் தடிமனாக, தொடும்போது உணரக்கூடிய வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பணத்தாளின் இரு பக்க ஓரங்களிலும் 6 புடைப்பு அடையாளக் கோடுகள் உள்ளன. இது கட்புலனற்றோர் பணத்தாளை எளிதாக அடையாளம் காண உதவும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணத்தாளை புற ஊதா ஒளியின் கீழ் வைக்கும்போது, அதில் உள்ள கொழும்பு நகரக் கோபுரங்களின் உருவங்கள் (Skyline) மற்றும் 75வது ஆண்டு நிறைவு இலச்சினை ஆகியவை இரண்டு வண்ணங்களில் ஒளிரும். இது இயந்திரங்கள் மூலம் கள்ள நோட்டுகளைக் கண்டறிய உதவுகிறது.

இந்த நிலையில், கள்ள நோட்டுகளைத் தவிர்க்க பொதுமக்கள் இந்த அம்சங்களைச் சரிபார்க்குமாறு மத்திய வங்கி, பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.