தந்தையின் கையிலிருந்து கீழே விழுந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு!!

309

தந்தையின் கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் களுத்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

சம்பவத்தன்று, தந்தை கடந்த 7 ஆம் திகதி தனது வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ள நிலையில் தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டிருந்த போது தந்தை சற்று உறங்கியதால் குழந்தை கையிலிருந்து கீழே தரையில் விழுந்துள்ளது.

தரையில் விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், குழந்தை உடனடியாக கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.