11ம் வகுப்பு மாணவி பாடசாலை விடுதியில் மர்ம மரணம் : பெற்றோர் புகார்!!

27

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கல்லேக்காடு பகுதியில் உள்ள பிரபல பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவி ருத்ராவின் மரணம், கல்வி நிலையங்களில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

ஒட்டப்பாலம் வரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷின் மகள் ருத்ரா (16). இவர் கல்லேக்காட்டில் உள்ள வியாச வித்யா பீடம் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று இரவு 9 மணியளவில், சக மாணவிகள் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு விடுதி அறைக்குத் திரும்பியுள்ளனர். அப்போது ருத்ரா அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த வடக்கு போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று போலீசார் தெரிவித்தாலும், மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்யத் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ருத்ராவின் தந்தை ஊடகங்களிடம் பேசுகையில், “எனது மகள் விடுதியில் உள்ள மூத்த மாணவர்களின் (Seniors) ராகிங் கொடுமை குறித்துப் பயப்படுவதாக ஏற்கனவே எங்களிடம் கூறி வருத்தப்பட்டார்.

இது சாதாரண தற்கொலை அல்ல” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தனது மகளின் மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, கேரள முதலமைச்சருக்கு அவர் புகார் அளித்துள்ளார்.

குடும்பத்தினரின் ராகிங் புகார்களைப் பள்ளி நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. பள்ளியில் அத்தகைய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பில்லை என அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.