
தென்னிலங்கையில் இரகசியமான முறையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய மகளை, தந்தை ஒருவர் கொலை செய்துள்ள நிலையில், அது குறித்த தகவலை சிறுமியின் பாட்டி வெளியிட்டுள்ளார்.
காலி, ஊரகஸ்மஹந்திய பகுதியில்14 வயது மகளை கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கையடக்க தொலைபேசி தொடர்பில் தந்தைக்கும் மகளுக்கும் கடும் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது கரந்தெனிய பகுதியிலுள்ள பாடசாலையில் 9ஆம் வகுப்பு பயின்று வந்த துல்மி சமாயா சத்சரணி என்ற மாணவி கொலை செய்யப்பட்டார்.
சம்பவத்தன்று இரவு உணவு அருந்திய பின் தனது அறைக்குச் சென்ற மாணவி, தலையணைக்கு அடியில் கையடக்க தொலைபேசி ஒன்றை மறைத்து வைத்து இரகசியமாகப் பயன்படுத்தியுள்ளார்.
இதனைத் தற்செயலாகக் கண்ட தந்தை, கடும் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கறுவாப்பட்டை வெட்டும் கத்தியால் மகளைக் கொடூரமாகத் தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மாணவி அண்டை வீட்டாரின் உதவியுடன் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக 41 வயதான இந்துனில் புஷ்பகுமார என்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தந்தையை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது மகளைப் பிரிந்து அவரது தாய் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், மகளின் எதிர்காலத்திற்காக தந்தை இரண்டாவது திருமணம் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரின் தாய்
துயரமான சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த சந்தேக நபரின் தாய்,
“தனது மகன் பேத்தி மீது அதிக அன்பு வைத்திருந்ததாக கண்ணீருடன் கூறினார். ஏற்கனவே கையடக்க தொலைபேசி பயன்படுத்தக் கூடாது எனத் தந்தை எச்சரித்திருந்த நிலையில்,
மற்றுமொரு நபர் மூலம் கிடைத்த தொலைபேசியை மகள் பயன்படுத்தியதால் ஏற்பட்ட திடீர் கோபமே இந்த விபரீதத்திற்கு காரணம்” என அவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட மாணவிக்கு தொலைபேசி வழங்கிய நபர் யார் என்பது குறித்து ஊரகஸ்மஹந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





