
ஐ. நா. அமைதிப் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கை விமானப்படை மத்திய ஆபிரிக்க குடியரசிற்கும் தென்சூடானுக்கும் பயணமாகவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் கோலித்த குணதிலக்க தெரிவித்தார்.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டருடன் 120பேர் கொண்ட குழு இன்று மத்திய ஆபிரிக்க குடியரசிற்கு புறப்பட்டுச் சென்றது. இரண்டாவது குழு வெகு விரைவில் தெற்கு சூடான் நோக்கி பயணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படை வரலாற்றில் ஐ.நா. அமைதிகாக்கும் படையுடன் இணைந்து கடமையாற்றுவதற்காக விமானப்படை ஹெலிகொப்டர்களும், விமானப்படை வீரர்களும் புறப்பட்டுச் சென்றமை இதுவே முதற்தடவையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படை ஐ.நா. அமைதிகாக்கும் படையுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம ளிக்கும் விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ருவண் வணிகசூரிய, விமானப்படையின் பதில் ஊடகப் பேச்சாளர் வின்ங் கொமாண்டர் பத்மன் கொஸ்தா, ஐ.நா. அமைதிகாக்கும் குழுவுக்கு பொறுப்பாக செல்லவுள்ள விமானப் படையைச் சேர்ந்த பின்ங் கொமாண்டர் விஸ்வ சாமன்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.





