இலங்கை அணியின் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பற்றிய கருத்துக்களை இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா பதிவு செய்துள்ளார்.
இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் பிரசன்னா இதுகுறித்து பதிவு செய்துள்ள கருத்தில், மிகவும் சுவாரஸ்யமான ஒரு சுழல் பந்துவீச்சாளர் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது முத்தையா முரளிதரனே.
இவரது பந்து வீச்சை விவரிப்பது அவ்வளவு சுலபமல்ல, முரளிதரன் ஒரு வினோதமான பந்து வீச்சாளர். இவரது பந்து வீச்சு முறை குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், ஸ்பின் உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளர் இவர். இவரது பந்துகள் பல முறையற்றவை என்று கருதப்பட்டது.
ஆனால் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்து வீச்சின் அனுகூலங்களை மட்டும் நான் கூற விரும்புகிறேன். அவரது பந்து வீச்சு முறை முற்றிலும் வேறுபட்டது. அவர் பந்துகளை பயங்கரமாகத் திருப்பக் கூடியவர் என்பதே பிரதானமாக இருந்து வருகிறது.
மேலும் அவர் பல்வேறு விதமான பந்து வீச்சுகளை வைத்துள்ளார் (தூஸ்ரா, லெக்ஸ்பின்). ஆனால் அது ஒரு திறமைதான் என்றாலும், அவரிடம் நான் காண்பது ஓஃப் ஸ்பின், ஓஃப் பிரேக் வகையிலேயே அவரால் விதம் விதமாக வீச முடிகிறது என்பதே. லெந்த், பிளைட், லூப் என்று அவரது கலவை அசத்தக்கூடியது.
எனவே அவர் தூஸ்ரா, லெக்ஸ்பின் என்று மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவரது ஓஃப் பிரேக், ஓஃப் ஸ் பின்னிலேயே அவ்வளவு வகைகள் உள்ளன. மேலும் விக்கெட்டுகள் எடுப்பதே குறிக்கோள் என்பதை அவர் அறிவிக்கும் விதமாக வீசுவதை முதன் முதலில் அறிவித்த பந்துவீச்சாளர் என்றே நான் கருதுகிறேன்.
துடுப்பாட்ட வீரர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும்போதும், அல்லது அடித்து ஆடும்போதும் சிரமம் அதிகம். இதில்தான் முரளி அவ்வளவு விக்கெட்டுகளைக் குவிக்க முடிந்துள்ளது என்று கூறியுள்ளார்.





