
இளம் பெண்களின் அலைபேசிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி நிர்வாண காணொளிகளைக் கோரி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதரகம உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீதிமன்றத்தில் நேற்று(25) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது பொலிஸ் உதவிப் பரிசோதகர் நீதிமன்றத்தில் முன்வைத்த தகவல்கள் வருமாறு:- சந்தேகநபர் கடந்த மூன்று வருடங்களாகப் போலி இணைய இணைப்புகளைப் பயன்படுத்தி இளம் பெண்களின் அலைபேசிகளுக்குள் ஊடுருவியுள்ளார்.
அங்கிருந்து பெண்களின் அந்தரங்கத் தரவுகளைத் தரவிறக்கம் செய்ததோடு, வட்ஸ்அப் ஊடாகத் தொடர்புகொண்டு மேலதிக நிர்வாண காணொளிகளைக் கோரி மிரட்டியுள்ளார்.
தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால், தன்னிடம் உள்ள காணொளிகளை இணையத்தில் கசியவிடுவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு களுத்துறை மற்றும் பாணந்துறை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
சந்தேகநபர் தனது அடையாளத்தை மறைக்க ‘கண்டறிய முடியாத’ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய போதிலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் ‘பேஸ்புக்’ நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரின் மனநிலை குறித்து முழுமையான மருத்துவ அறிக்கையைப் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தும் இளம் பெண்கள் மத்தியில் மிகுந்த எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.





