இலங்கையில் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல் : நூற்றுக்கணக்கானோரை தேடி தொடரும் மீட்புப் பணி!!

33

புதிய இணைப்பு : இலங்கை கடல் எல்லைக்குள் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சி.டி.ஆர் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கப்பலில் 180 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகளில் கடற்படை சுழியோடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏனையோருக்கு என்ன நடந்தது என்பது பற்றி கடற்படை ஆராய்ந்து வருவதுடன், இன்று (04) மாலை 3 மணியளவில் அது தொடர்பில் அவசர ஊடக சந்திபொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு : இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ‘ஐரிஸ் தேனா’ என்ற ஈரானிய கப்பலில் இருந்த 180 பேரில் சுமார் 30 பேர் காயமடைந்து காலி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டிருந்து.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

1979 ஆம் ஆண்டின் ‘சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு’ (International Convention on Maritime Search and Rescue) உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின் படி, கடலில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் அவர்களின் தேசியத்தைப் பாராது மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டியது இலங்கையின் கடமையாகும் என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு : காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்

குறித்த கப்பலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து விசேட கூட்டு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளன.

குறித்த கப்பல் விபத்துக்குள்ளான பின்னர் அபாய சமிக்ஞையை (Distress call) வெளியிட்டதாகவும், இதனையடுத்து மீட்புப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 5:08 மணியளவில் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு அவசர செய்தி கிடைத்ததினையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை, காலை 6:00 மற்றும் 7:00 மணியளவில் மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது.

கடலில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும், மீட்பு பணிகள் முப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ஈரான் கப்பலொன்று காலி கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா என சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் எம்.பினால் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.