வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் : சென்னையில் கைதான இலங்கையருக்கு விளக்கமறியல்!!

755

Arun

சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் அருண் செல்வராஜூவை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட அருண் செல்வராஜூவை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் புதன்கிழமை இரவு தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரது வீட்டில் இருந்து டயரி, வரைபடங்கள், இந்தியா, இலங்கை கடவுச்சீட்டுக்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள் கிடைத்தன. இவரது வங்கி கணக்கில் இந்திய ரூ.2 கோடி வரை பணம் இலங்கையில் இருந்து இணையம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அண்மையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி சாகிர் உசேன், கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி ஆகியோருடன் அருண் செல்வராஜூக்கு இடையே நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், சாலிகிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து நீண்டநாள் தங்கியிருப்பதும், சென்னையில் முக்கிய இடங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் உளவு பார்த்திருப்பதும், பல முக்கிய இடங்களைப் படம் பிடித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.