மத்திய கிழக்கில் பதற்றநிலை : ஆட்டம்காணும் தங்கத்தின் விலை – ஒரே நாளில் ஏற்பட்ட மாற்றங்கள்!!

18

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றநிலை காரணமாக இலங்கையில் இரண்டு முறை தங்கவிலை அதிகரித்துள்ளது.

இன்று காலை 410,000 ரூபாயாக இருந்த தங்கவிலை மாலையில் 2,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 412,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் இன்றைய தினம் (07.03.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5170 முதல் 5190 வரை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றைய தினம் 5136 அமெரிக்க டொலர்களாகவும், நேற்று முன் தினம் 5,062.14 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியிருந்தது.

அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 379200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 410000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதையும் விட மிக அதிக உயர்வைக் கண்டுள்ளதால், ஆசியாவின் மிகப்பெரிய தங்கச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் அதன் தேவை பெருமளவு குறைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,100 டொலர்களுக்கு மேல் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியாவில் இந்த அதீத விலை உயர்வு மற்றும் விலையில் காணப்படும் நிலையற்ற தன்மை காரணமாக, பொதுமக்கள் மற்றும் நகை வியாபாரிகள் புதிய தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

இதனால் இந்திய சந்தையில் தங்கத்திற்கான தள்ளுபடி அதிகரித்துள்ள போதிலும், விற்பனை மந்தமாகவே உள்ளது. மறுபுறம், உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வு நாடான சீனாவில் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது.

சீனாவில் பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் நிலவும் மந்தநிலை காரணமாக, அந்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகத் தங்கத்தையே கருதுகின்றனர்.

இதனால் விலை அதிகமாக இருந்தபோதிலும், சீனாவில் தங்கத்திற்கான முதலீட்டுத் தேவை குறையாமல் சீராக உள்ளது. இருப்பினும், விலை உயர்வு காரணமாக நகை வடிவில் தங்கம் வாங்குவது அங்கும் சற்றே பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலைப் பொறுத்தே தங்க விலையில் அடுத்தகட்ட மாற்றம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.