போர் பதற்றத்திற்கு மத்தியிலும் இலங்கையை வந்தடையும் எரிபொருள், எரிவாயு ஏற்றிய கப்பல்கள்!!

36

இலங்கை விண்ணப்பம் செய்துள்ள 4 எரிபொருள் கப்பல்களும், 6 லிட்ரோ எரிவாயு கப்பல்களும் இந்த மாதத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

தற்போது சேமிப்பு வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. எனினும் மார்ச் மாதத்திற்கான விநியோகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அடுத்த மாதம் இறுதி வரை போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்யும் நாடுகள் போர் வலயத்திற்கு வெளியே அமைந்துள்ளதால், விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் அமெரிக்காவிலிருந்து மாலைத்தீவு வரை ஏற்கனவே வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொகுதி அடுத்த சில நாட்களில் இலங்கையை வந்தடையும் என அதன் தலைவர் சன்ன குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விண்ணப்பம் செய்யப்பட்ட மற்றுமொரு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் மார்ச் 17ஆம் திகதி மாலைத்தீவை வந்தடையவுள்ளது.

ஏப்ரல் மாதத்திலும் மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.