
பொலன்னறுவை – புலஸ்திகம தம்பால பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(18.03.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்பால – 400 மார்க்கத்தில் உள்ள கெவலஹட்ட பிரதேசத்தின் வளைவான பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்டபோது எதிரே வந்த பேருந்து ஒன்றுடன் மோதி விலகிச் சென்றது. அவ்வாறு விலகிச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து மற்றுமொரு பேருந்து உடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
விபத்து தொடர்பில், பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த போது மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு தாங்கி கீழிறங்கிய நிலையில் இருந்துள்ளது.
வளைவில் திரும்பும் போது அந்தத் தாங்கி தார் வீதியில் மோதியதால், ஓட்டுநரால் மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாகவே மோட்டார் சைக்கிள் தடம் மாறி பேருந்துகளுடன் மோதியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





