அலட்சியத்தால் பறிபோன இரு உயிர்கள் : 8 மாத கர்ப்பிணி பலி : கருவில் இருந்த சிசுவும் மரணம்!!

19

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நெல் அறுவடை இயந்திர ஓட்டுநரின் கவனக்குறைவால், இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த 21 வயது கர்ப்பிணிப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை அருகே உள்ள தாகியார் நகரைச் சேர்ந்தவர் சோனியா காந்தி (21). இவரது கணவர் தாமரைச்செல்வன்.

சோனியா காந்தி 8½ மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சோனியா காந்தி தனது தம்பி கார்த்திகேயனுடன் இருசக்கர வாகனத்தில் தீத்தான்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

அவர்களுக்கு முன்னால் ஒரு ராட்சச நெல் அறுவடை இயந்திரம் சென்று கொண்டிருந்தது. சாலையில் மின்சாரக் கம்பிகள் தாழ்வாகச் சென்றதால், ஓட்டுநர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு, பின்னால் பைக் வருவதைக் கவனிக்காமல் ரிவர்ஸில் இயக்கியுள்ளார்.

நெல் அறுவடை இயந்திரத்தில் அதிக சத்தத்துடன் சினிமா பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்ததால், பின்னால் இருந்தவர்களின் சத்தத்தை ஓட்டுநரால் கேட்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

திடீரெனப் பின்னோக்கி வந்த இயந்திரம் மோதியதில், சோனியா காந்தி நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அவர் முத்தநந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், பின்னர் தீவிர சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சோனியா காந்தியும், அவரது கருவில் இருந்த சிசுவும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள அந்த இயந்திரத்தின் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். ஓட்டுநர் பாடல்களைச் சத்தமாக வைத்திருந்ததும், கவனக்குறைவாக ரிவர்ஸ் எடுத்ததுமே விபத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது