எயார் கனடா விமான விபத்து : 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உயிர் தப்பிய பெண்!!

20

ஏர் கனடா விமான விபத்தில், 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு உயிர் தப்பிய பெண்ணொருவர் குறித்த ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம், அதாவது, மார்ச் மாதம் 22ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, கனடாவின் மொன்றியலிலிருந்து, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விமான ஓடுபாதையின் குறுக்கே வேகமாக வந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் மீது மோதி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தின் விமானிகள் இருவரும் உயிரிழந்தார்கள்.

விமானம் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய வேகத்தில், பயணிகள் அனைவரும் முன் இருக்கைகள் மீது மோத, பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இரத்தம் சொட்டச் சொட்ட அதிர்ச்சியில் உறைந்திருந்த பயணிகளை, அவர்களுடைய சக பயணிகள் ஒருவருக்கொருவர் உதவி, விமானத்திலிருந்து இறக்கியுள்ளார்கள்.

இதற்கிடையில், விமானத்தில் அமர்ந்திருந்த தலைமை விமானப் பணிப்பெண்ணான Solange Tremblay, விமானம் மோதிய வேகத்தில், இருக்கையுடன் விமானத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

சுமார் 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட Solangeக்கு ஒரு காலில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகவும் அவரது மகளான சாரா (Sarah Lepine) தெரிவித்துள்ளார்.

அவ்வளவு பெரிய ஒரு விமான விபத்து, சுமார் 330 அடி தூரம் தூக்கி வீசப்பட்டும் தன் தாய் உயிருடன் இருக்கிறாரென்றால், அது ஒரு அற்புதம்தான் என்று கூறும் சாரா, கடவுள்தான் தன் தாயைக் காப்பாற்றியிருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.