மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து பெண் மீட்கப்பட்ட சம்பவம் : வேலையின்றி சொத்து சேர்த்துள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள்!!

281

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் உறவினர்கள்

தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக இது தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வரும் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 3 சந்தேகநபர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, சந்தேகநபர்களின் உறவினர்கள் சிலர் எந்தவித வேலைகளுக்கும் செல்லாது சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, முச்சக்கரவண்டி மற்றும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில், இவ்வாறான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைத்தது, அவர்களும் சந்தேகநபர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனரா என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சந்தேகநபர்களில் முச்சக்கர வண்டி சாரதியான பிரதான சந்தேக நபர், நிதி கொடுக்கல் வாங்கல்களிலும் மோசடிகளைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, இந்த குழுவினர் மேலும் பல சம்பவங்களுடன் தொடர்புப்பட்டிருக்கலாம் என்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.