
தற்போது நிலவும் கடுமையான வெப்பம், வீட்டு செல்லப்பிராணிகளுக்கு, குறிப்பாக அடர் நிற உரோமம் கொண்ட நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும் என கால்நடை மருத்துவர் டாக்டர் ஷோபத் விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
நிறுத்தப்பட்ட வாகனங்களுக்குள் விலங்குகளை ஒருபோதும் விட்டுச் செல்லக்கூடாது என்றும், உச்ச நேரங்களில் செல்லப்பிராணிகளை நேரடி சூரிய ஒளியில் காட்டுவதைத் தவிர்க்குமாறு உரிமையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ராட்வீலர்கள் போன்ற பெரிய இன நாய்களும், 40 கிலோகிராமுக்கு மேல் எடை கொண்ட விலங்குகளும் குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக் கூடியவை. தற்போதைய கடுமையான வெப்பம் வெவ்வேறு விலங்குகளை வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது.

பூனைகள், நாய்கள், பண்ணை விலங்குகள் மற்றும் செல்லப் பறவைகள் ஒவ்வொன்றும் தனித்துவமான அபாயங்களை எதிர்கொள்கின்றன. அதிகப்படியான மூச்சு வாங்குதல் மற்றும் நாக்கை வெளியே நீட்டுதல் ஆகியவை துன்பத்தின் அறிகுறிகளாகும்.
அவை தங்களால் முடிந்தவரை நாக்கை வெளியே நீட்டி மூச்சு வாங்குவதை நீங்கள் காண்பீர்கள். பூனைகளும் இதே போன்ற அறிகுறிகளைக் காட்டக்கூடும்.
அத்தகைய சந்தர்ப்பங்களில், அதற்கு சிறிது பனிக்கட்டியைக் கொடுங்கள், தண்ணீரில் ஊற வைக்கவும், உடனடியாக கால்நடை மருத்துவ உதவியை நாடவும். ஏனெனில் தாமதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும்.
செல்லப்பிராணிகளுக்குத் தொடர்ந்து தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும், பகல் நேரங்களில் வாய்க்கவசம் அணிவிப்பதைத் தவிர்க்கவும், வெப்பம் தாக்குவதைக் குறைக்கக் கூண்டுகளை நிழலில் வைக்கவும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.





