
வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டுப் பிரச்சினைக்கு செட்டிகுளம் தீர்வாகாது என வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா சாளம்பைக்குளம் குப்பை மேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக செட்டிகுளம், இரணை இலுப்பைக்குளம் மற்றும் ஓமந்தை ஆகிய இடங்களை அடையாளப்படுத்துவது மற்றும் அங்கு குப்பைகளைக் கொட்ட முற்படுவது தொடர்பில் செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளராக எனது கடும் கண்டனத்தையும் தெளிவான விளக்கத்தையும் முன்வைக்கிறேன்
இடமாற்றம் தீர்வாகாது அது எமது சபையின் இறையாண்மை. வவுனியா மாநகர சபை மற்றும் ஏனைய பகுதிகளின் குப்பைகளை செட்டிகுளம் பிரதேச சபை எல்லைக்குள் கொண்டு வருவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின்படி ஒரு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்தைப் பேணுவது அந்தந்த சபையின் தனிப்பட்ட பொறுப்பாகும்.
எமது பிரதேச மக்களே எமது எல்லைக்குள் உள்ள குப்பை மேடுகளால் ஏற்கனவே பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வவுனியா மாநகரத்தின் சுமையை எமது மக்கள் மீது திணிப்பது எவ்விதத்திலும் அறமாகாது.

சாளம்பைக்குளம் குப்பை மேடு வரலாற்று ரீதியான உண்மை இது தான். சாளம்பைக்குளம் குப்பை மேடானது சுமார் 60 வருட கால வரலாற்றைக் கொண்டது. என நான் நினைக்கிறேன் 1992 ஆம் ஆண்டு முதல் அங்கு குப்பைகள் முறையாகக் கொட்டப்பட்டு வருகின்றன. என தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய மக்கள் குடியிருப்புக்கள் அந்த குப்பை மேடு அமைந்த பின்னரே அங்கு உருவாகின என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
எனினும், அங்கு வாழும் 500 குடும்பங்களின் சுகாதார நிலையை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. அதற்காக ஒரு பிரதேசத்தின் பிரச்சனையை இன்னொரு பிரதேசத்திற்கு மாற்றுவது ஆரோக்கியமான நிர்வாக நடைமுறையல்ல.
மத்திய அரசாங்கமும் மாவட்ட அபிவிருத்திக் குழுவும் இதற்காகப் பாரிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். மாற்று இடங்களைத் தேடுவதை விடுத்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குப்பைகளை மீள்சுழற்சி (Recycling) செய்யவும் அவற்றை எரிசக்தியாக மாற்றவும் அல்லது உரமாக்கும் செயற்திட்டங்களை (Waste-to-Energy projects) சாளம்பைக்குளத்திலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேசிய சுற்றுச்சூழல் சட்டம் (National Environmental Act) மற்றும் சுகாதாரக் கட்டளைச் சட்டங்களின்படி ஒரு பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு முன்னர் முறையான சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்பட வேண்டும்.
செட்டிகுளம் மக்கள் மற்றும் சபையின் அனுமதி இன்றி இவ்வாறான தீர்மானங்களை திணிக்க முடியாது. இது குறித்து செட்டிகுளம் பிரதேச சபை கூடிய விரைவில் கூடி உத்தியோகபூர்வமான தீர்மானத்தை எடுத்து அரசாங்கத்திற்கு அறிவிக்கும்.
வவுனியா மாநகர சபை தனது குப்பைகளைத் தனது எல்லைக்குள்ளேயே அல்லது அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் நவீன பொறிமுறைகளைப் பயன்படுத்திச் சுத்திகரிக்க வேண்டுமே தவிர செட்டிகுளம் போன்ற வளர்ந்து வரும் பிரதேசங்களை குப்பைத் தொட்டியாக்கக்கூடாது.
மக்களின் ஆரோக்கியம் மற்றும் சூழல் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





