தமிழ் – சிங்கள மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

42

தற்போதைய கடும் வெப்பமான வானிலையில் காரணமாக தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்போது பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் காலை 10 மணிக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால், கிராம ஓட்டம் மற்றும் மிதிவண்டிப் போட்டிகள் உள்ளிட்ட வெகுஜன விளையாட்டுகள் நடைபெறுவதுதான்.

அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு நாங்கள் கூற விரும்புவது என்னவென்றால், அதற்கென சரியான நேரத்தை தேர்ந்தெடுத்து, காலை 10 மணிக்குள் வெளிப்புற நடவடிக்கைகளை முடித்து கொள்ள வேண்டும்.

மாலை நேர நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணிக்கு மேல் தொடங்குகின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அத்தகைய சூழ்நிலையில்,

விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள் தகுந்த அளவு நீர் அருந்தி, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.

வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள், நாம் கடும் வெப்பத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அசாதாரணமான தசைத் துடிப்புகளைக் கண்டறியலாம். அதீத சோர்வு ஏற்படலாம். இதுபோன்ற உணர்வுகளை நீங்கள் உணரும்போது,

​​விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, ஒரு தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். உங்கள் உடல் வெப்பநிலையைக் குறைக்க நீங்கள் சென்று குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள், தாங்கள் ஏற்பாடு செய்யும் இடங்களில் கடும் வெப்பத்தின் அபாயங்களைத் தவிர்க்கத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குளிர்ந்த நீர், பனிக்கட்டிகள் போன்றவை என்றுள்ளார்.

இதேவேளை சித்திரை புத்தாண்டு காலங்களில் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விபத்துக்களைத் தவிர்க்கவும் சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

விளையாட்டு மருத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை விளையாட்டு மருத்துவ சங்கத்தின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த வழிகாட்டியில் உள்ள முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வருமாறு:

1. வழுக்கு மரம் ஏறுதல் மரத்தின் உச்சியில் ஏறும்போது ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்க, மரத்தைச் சுற்றியுள்ள தரைப்பகுதி மென்மையான மணல் அல்லது வைக்கோல் கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். மரத்தின் அடியில் தேவையற்ற முறையில் மக்கள் குழுமுவதைத் தவிர்க்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.

2. கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வலுவான கயிறுகள் பயன்படுத்தப்பட வேண்டும். கயிறு பழுதடைந்துள்ளதா என்பது முன்கூட்டியே சரிபார்க்கப்பட வேண்டும்.

வீரர்கள் வழுக்கி விழுவதைத் தவிர்க்க பொருத்தமான காலணிகளை அணிவதுடன், புல் தரை போன்ற பாதுகாப்பான மேற்பரப்பில் போட்டியை நடத்த வேண்டும்.

3. சாக்கு ஓட்டம் ஓடும் பாதையில் கற்கள், குழிகள் அல்லது தடைகள் ஏதுமின்றி தட்டையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கிழிசல்கள் இல்லாத உயர்தரமான சாக்குகளைப் பயன்படுத்துவதுடன், வீரர்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேண வேண்டும்.

4. பொதுவான சுகாதார ஆலோசனைகள் தற்போதைய வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு, வீரர்கள் நீர்ச்சத்தை பேணுவதற்கு போதியளவு நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். திடீர் விபத்துக்கள் ஏற்பட்டால் முதலுதவி வழங்கவும், நோயாளிகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவும் அவசர மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பாரம்பரிய விளையாட்டுக்களின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதேவேளை, உயிராபத்துக்கள் மற்றும் பாரிய காயங்களைத் தவிர்க்க இந்த வழிகாட்டல்களைக் கடுமையாகப் பின்பற்றுமாறு விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.