தவறான ஊசி செலுத்தியதில் இளம்பெண் உயிரிழப்பு : மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

26

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்புக் களமானது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பவானி. இவர் கடும் தலைவலி காரணமாக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு முதலுதவி மற்றும் ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே பவானியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

மருத்துவர்கள் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளித்தும் பலனின்றி, பவானி பரிதாபமாக உயிரிழந்தார். சாதாரண தலைவலிக்குச் சிகிச்சை பெறச் சென்ற பெண், திடீரென உயிரிழந்தது அவரது குடும்பத்தினரைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பவானியின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவும், தவறான ஊசி செலுத்தப்பட்டதுமே காரணம் என்று கூறி, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனை முன் திரண்டனர்.

“தவறான சிகிச்சையால் ஒரு உயிரைப் பறித்து விட்டார்கள்” என முழக்கமிட்ட அவர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூளைமேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த பவானியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“சிகிச்சையில் எவ்வித குறைபாடும் இல்லை, உயிரிழப்பிற்கான காரணம் பிரேதப் பரிசோதனை முடிவில்தான் தெரியும்” என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.