வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத் தேர்த்திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

275

தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று (14.04.2026) வவுனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோவிலின் தேர்த் திருவிழா பக்திப் பெருக்குடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வவுனியாவின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா, மகோற்சவ பிரதம குருக்களின் தலைமையில் ஒன்பதாம் நாளான இன்று எழுச்சியுடன் நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு ஆதிவிநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேளதாள வாத்தியங்கள் முழங்க, உள்வீதி வலம் வந்த விநாயகப் பெருமான், பின்னர் வண்ண மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

சித்திரைப் புத்தாண்டுடன் தேர்த்திருவிழா இணைந்து வந்ததால், வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஒரே இடத்தில் கூடி விநாயகப் பெருமானை வழிபட்டனர்.

ஆலய முன்றலில் கூடியிருந்த மக்கள், சுவாமி தரிசனம் செய்த கையோடு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்திற்கொண்டு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.