
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில், மூன்று பெண்களிடம் கொள்ளையடித்த பிரதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி இரவு இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால், ஏப்ரல் 17 ஆம் திகதி பண்டுலகம பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அனுராதபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து, பாதிக்கப்பட்ட பெண்களுடன் நட்பாக பழகி, அதே பேருந்தில் ஏறியுள்ளார். பயணத்தின் போது, அவர்களுக்கு உணவையும் பானத்தையும் கொடுத்து மயக்க நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
அவர்கள் அரை மயக்க நிலையில் இருந்தபோது, அவர்களிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

பொலிஸாரின் தீவிர விசாரணையின் பயனாக, கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சலியாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.





