வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் : உரிமையாளர்களுக்கு அவசர அழைப்பு!!

76

வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு விநியோகத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள், உரியவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் அஞ்சல் அலுவலகத்திலேயே தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களுக்குரிய வாடிக்கையாளர்களைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ள அஞ்சல் அலுவலக அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.

எனினும், பலருடைய தொலைபேசி இலக்கங்கள் இயங்காத நிலையிலும், தொடர்புகொள்ள முடியாதவாறும் காணப்படுவதால் இவற்றை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை தமது சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி அவற்றை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அலுவலக நேரங்களில் நேரடியாகச் சென்று அனுமதிப்பத்திரங்களைக் கோர முடியும், அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது தற்காலிக அனுமதிப்பத்திரத்தின் பிரதியைச் சமர்ப்பித்துத் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, தகுதியானவர்கள் விரைந்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது சாரதி அனுமதிப்பத்திரத்திற்காகக் காத்திருந்தால், இந்தத் தகவலை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் உரிய நேரத்தில் அவை அவர்களைச் சென்றடைய உதவ முடியும் எனவும் அஞ்சல் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.