
கொழும்பில் 19 வயது இளைஞனை கடத்தி, கழுத்தை நெரித்து களனி ஆற்றில் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் பல தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான பழனி ரிமோஷன் மற்றும் கொட்டஹேன அரவிந்த ஆகிய இருவரே திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், கொலை செய்யப்பட்ட இளைஞரைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர், கொழும்பு 14, புளூமண்டல் வீதியில் வசிக்கும் ஸ்ரீ கந்தன் பாத்திக்குமார் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் 22ஆம் திகதியன்று காரில் இளைஞரைக் கடத்தி, மட்டக்குளியிலுள்ள களனி ஆறு-தெல்கஹவத்த சந்திப்புக்கு அருகிலுள்ள ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று, கழுத்தை நெரித்துக் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்து ஜயவர்தனபுர முகாம் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாமுனுகம, பெலியகொட மற்றும் வெள்ளம்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சந்தேக நபர்கள், கொழும்பு 15 வந்திய உயான, மட்டக்குளிய மற்றும் புதுகம பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும். இவர்கள் 23 முதல் 36 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களிடமிருந்து 23 கிராம் ஐஸ், 750 மில்லிகிராம் மற்றும் 3 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் எரிக் பெரேராவின் அறிவுறுத்தல்களின் பேரில், மட்டக்குளிய பொலிஸ் பொறுப்பாசிரியர் டி.ஜி. குணரத்ன உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




