வவுனியா விபுலானந்தா பாடசாலையில் உலக மலேரியா தின விழிப்புணர்வு!!

61

ஆரோக்கியமான சமூகத்தை நோக்கிய எமது பயணம் எனும் தொனிப்பொருளில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா பாடசாலை மாணவர்களுக்கான விசேட விழிப்புணர்வுப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மலேரியா தடை இயக்க பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் எதிர்கால சந்ததியினரை மலேரியா போன்ற நோயற்றவர்களாகவும் விழிப்புணர்வு மிக்கவர்களாகவும் வளர்த்தெடுக்கும் நோக்கில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டன. இப்போட்டித் தொடரில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மலேரியா மீண்டும் பரவாமல் தடுப்பது குறித்த தெளிவை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்துவதே இப்போட்டிகளின் முக்கிய நோக்கமாகும்.

வெற்றி பெற்ற மற்றும் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிப்பதற்காக, பிராந்திய வைத்திய அதிகாரி நிசாந்தினி, வெளிக்கள உத்தியோகஸ்தர் சரண்ராஜ் மற்றும் சுகாதாரப் பரிசோதகர் வாகீசன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, பொதுமகனொருவர் பெறுமதியான பரிசுகளை வழங்கிப் பங்களிப்புச் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாஸ்கரன், பிராந்திய வைத்திய அதிகாரி நிசாந்தினி, பாடசாலைப் பிரதி முதல்வர், வவுனியா செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.

அனோபிலிஸ் நுளம்புகள் மூலம் பரவும் மலேரியா குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

காய்ச்சல், குளிர், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாகச் சிகிச்சை பெறுமாறும், வீட்டுச் சூழலில் நீர் தேங்காமல் பாதுகாப்பதன் மூலமும், கிணறுகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் மலேரியா அற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.