
வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் தொடர்பில், வட மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறு அவர் பணித்துள்ளார்.
மாநகர சபையின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கழிவுநீர் வடிகால் தூர்வாருதலில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கையில்சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய முறைகேடுகள் வருமாறு:

திருநாவற்குளம் முறைகேடு : திருநாவற்குளம் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணிகளில் சட்ட விதிகளும், சபை தீர்மானங்களும் முழுமையாக மீறப்பட்டுள்ளன. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இப்பணிகளுக்கான எந்தவொரு கொடுப்பனவையும் வழங்க வேண்டாம் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
காணிப் பகிர்வு விதிமீறல் : வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள மாநகர சபைக்குச் சொந்தமான காணி, உரிய அமைச்சின் அனுமதி அல்லது முறையான டெண்டர் நடைமுறைகள் இன்றி வியாபாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கடுமையான விதிமீறல் என விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்கும் நோக்கில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குப் பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன:
1. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட காணித்துண்டுகள் தொடர்பான நடைமுறைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்தல்.
2. ஒப்பந்தங்கள் இன்றி காணி பெற்ற வியாபாரிகளிடமிருந்து அறவிடப்படும் சட்டவிரோத வரிகளை உடனடியாக நிறுத்துதல்
3. பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சட்டப்பூர்வமான மாற்று இடங்களை வழங்குதல்.
4. எதிர்காலத்தில் அனைத்து ஒப்பந்தங்களும் உரிய அதிகாரிகளின் ஒப்புதலுடன் சட்டரீதியாக முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்தல்.
ஆளுநரின் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன் அவர்கள், வவுனியா மாநகர சபை ஆணையாளருக்கு இன்று (28.04.2026) எழுத்துமூல பணிப்புரையை விடுத்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அது குறித்த முழுமையான அறிக்கையை இரண்டு வார காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாநகர சபை ஆணையாளருக்குக் கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தகவல் : வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு.




